Tuesday, 9 January 2018

MARGAZLI DAY 26


திருப்பாவை பாடல் 26 

மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான் 
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் 
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன 
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே 
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே 
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே 
கோல விளக்கே கொடியே விதானமே 
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்

பொருள்:

பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலக்கல் நிறத்தவனே! பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற் கொள்ளப்படும் மார்கழி நோன் பிற்கு, உல கத்தையே அதிர வைக்கும் ஒலியையும், பால் சாதம் போன்ற நிறத்தையும், உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்

விளக்கம்:

பாஞ்சஜன்யம் என்னும் சங்கை திருமால் ஏந்தியிருக்கிறார். இந்த சங்கின் கதையைக் கேளுங்கள். பஞ்சசன் என்ற அசுரன் சாந்தீபனி என்ற முனிவரின் மகனைக் கொன்று விட்டு, கடலில் போய் மறைந்து கொண்டான். கிருஷ்ணர் அவரிடம் மாணவராகச் சேர்ந்தார். குருதட்சணையாக தன் மகனைக் கொன்ற அசுரனை பழிவாங்க வேண்டும் என சாந்தீபனி முனிவர் உத்தரவிட்டார். கிருஷ்ணரும் பஞ்சசனைக் கொன்று அவனைச் சங்காக மாற்றி தனது கையில் வைத்துக் கொண்டார். அசுரசங்கு என்பதால் தான் குரு÷க்ஷத்திரக்களத்தில் அதை ஊதும்போதெல்லாம் அதன் பேரொலி கேட்டு எதிரிப்படைகள் நடுங்கின.



 திருப்பள்ளியெழுச்சி - பாடல்  6 

பப்பற வீட்டிருந்து உணரும் நின்னடியார் 
பந்தனையறுத்து வந்தறுத்தார் அவர் பலரும் 
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பில் 
வணங்குகின்றார், அணங்கின் மணவாளா 
செப்புறு கமலங்கள் மலரும் தண்வயல் சூழ் 
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
இப்பிறப்பறுத்து எமையாண்டு அருள்புரியும் 
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

பொருள்:

பார்வதிதவியின் துணைவனே! செந்தாமரை மலர்கள் மலர்ந்த குளிர்ந்த வயல் கள் சூழ்ந்த திருப்பெருந் துறையில் வசிக்கும் சிவபெருமானே! எம்பெருமானே! உன் அருள் என்னும் பெருந்தகைமையை உள்ளத்தில் உணரும் அடியவர்கள், குடும்பம், பந்தபாசங்களை உதறிவிட்டு உன்னைத் தரிசிக்க வந்துள்ளனர்.கண்ணில் மை தீட்டிய பெண்மணிகளும் மனித இயல்புக்கு ஏற்ப வணங்க உன்னை வணங்க வந்துள்ளனர். எங்களுடைய பிறப்பை நீக்கி எங்களை ஆட்கொண்டு முக்தி நிலை தர உடனே விழித்தருள வேண்டும்

விளக்கம்:

சாதாரண மனிதன் எப்படி இறைவனை வணங்குவான்? பூ கொண்டு வருவான், கற்பூர ஆரத்தி செய்வான், தூபத்தைப் போடுவான், நெய் தீபம் ஏற்றுவான்... இதையெல்லாம் செய்து விட்டு, ஒரு கஷ்டம் வந்து விட்டால், "இப்படியெல்லாம் செய்தும் என்னை சோதிக்கிறாயே! இது உனக்கே அடுக்குமா? என்று திட்டுவான். இப்படிப் பட்டவர்களும் கோயிலில் நிற்கிறார்கள். பந்தபாசமே வேண்டாமென்று அவனே கதியென சரணமடைய வந்தவர்களும் நிற்கிறார்கள். எப்படிப் பட்ட பக்தியாக இருந்தாலென்ன! உன்னை நம்பி அவர்கள் வந்து விட்டார்கள்.அந்த இருதரப்புக்கும் பிறப்பற்ற நிலை தந்து பேரானந்தத்தில் திளைக்க வைக்க வேண்டும் என்று வேண்டுகிறார் மாணிக்கவாசகர்அறிந்தும், அறியாமலும் பக்திசெலுத்தும் இருதரப்பாரும் பாட வேண்டிய முக்கியமான பாடல் இது.

No comments:

Post a Comment