Saturday, 6 January 2018

MARGAZLI day 23


திருப்பாவை பாடல் 23 

மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும் 
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து 
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி 
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு 
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன் 
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய 
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த 
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

பொருள்:

மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்

விளக்கம்:

எதிரே இருப்பவன் கடவுள் என்பதற்காக வீட்டைக் கொடு, பொருளைக் கொடு, நகையைக் கொடு, வாகனத்தைக் கொடு...என நம் கோரிக்கைகளை ஆண்டவன் முன்னால் வைக்கக்கூடாது. அவை நமக்கு அமைய வேண்டுமென்ற விதியிருந்தால், நம் உழைப்பைப் பொறுத்து அவை இறைவனால் நமக்குத் தரப்பட்டு விடும். எனவே, நியாயமான கோரிக்கைகளையே இறைவனிடம் சொல்ல வேண்டும். இதைத்தான் ஆயர்குலப் பெண் கள் நாங்கள் கேட்பது நியாயம் எனத் தெரிந்தால் மட்டும் அதைக் கொடு எனக் கேட்கிறார்கள். அவர்கள் கேட்டது என்ன? அந்தக் கண்ணனையே கேட்டார்கள். அவனோடு கலந்து விட்டால் சோறு  எதற்கு? வாகனம் எதற்கு? இதர வசதிகள் எதற்கு? அதற்கெல்லாம் மேலான பேரின்பமல்லவா கிடைக்கும். அதனால் அவனையே கேட்டார்கள் ஆயர்குலப் பெண்கள்.



திருப்பள்ளியெழுச்சி - பாடல்  3 

கூவின பூங்குயில் கூவின கோழி 
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் 
ஓவின தாரகைகளி ஒளி உதயத்து 
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத் 
தேவ நற்செறி கழல் தாளிணை காட்டாய் 
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய் 
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

பொருள்:

 திருப்பெருந்துறையில் குடிகொண்டுள்ள சிவபெருமானே! உதயத்தை அறிவிக்க குயில்களும், கோழிகளும் கூவிவிட்டன. குருகுப் பறவைகளும் கிரீச்சீடுகின்றன. சங்குகள் முழங்கும் ஒலி கேட்கிறது. நட்சத்திரங்கள் சூரிய ஒளியில் கலந்து அதனுடன் ஒன்றிவிட்டது போல, நானும் மனதில் உன்னை மட்டுமே காண வேண்டும் என்ற விருப்பத்தை நிரப்பி வந்துள்ளேன். எனக்கு நீ உன் திருவடியைக் காட்டு. தேவர்களாலும் பிறராலும் அறிய முடியாதவனே! எனக்கு எளிமையாகக் காட்சி தருபவனே! எம்பெருமானே! உறக்கம் நீங்கி எழுவாயாக

விளக்கம்:

அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடு கிடையாது. பேசிக் கொண்டே இறைவனை வணங்குவது, கோயிலுக்குள் உலக விஷயங்களை அலசுவது போன்றவை நிச்சயம் பலன் தராது. அங்கே, இறைவனின் திருநாமம் மட்டுமே கேட்க வேண்டும். மனதை இறைவனின் பக்கம் திருப்பி, அவனுடைய திவ்ய சரித்திரத்தை மனதில் நினைத்து வழிபட்டால் தான் பலனுண்டு என்பது இப்பாடலின் உட்கருத்து.

No comments:

Post a Comment