Showing posts with label Tirupallieliuchi. Show all posts
Showing posts with label Tirupallieliuchi. Show all posts

Wednesday, 10 January 2018

MARGAZLI DAY 27 -- கூடாரவல்லி


திருப்பாவை பாடல் 27 

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப் 
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம் 
நாடு புகழும் பரிசினால் நன்றாக 
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே 
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் 
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு 
மூடநெய் பெய்து முழங்கை வழிவார 
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

பொருள்:

எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக! அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது. கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்

விளக்கம்:

"கூடாரை வெல்லும் என்ற சொற்றொடரில் இருந்து "கூடாரவல்லி என்ற வார்த்தை பிறந்தது. இப்போது பெருமாள் கோயில்களிலும், வைணவர்களின் வீடுகளிலும் கூடாரவல்லி விழா கொண்டாடப்படும். இன்று அக்கார அடிசில் எனப்படும் உணவு பிரசித்தம். சாப்பாட்டின் மீது நெய் மிதக்கும். சர்க்கரைப் பொங்கல் போன்ற இந்த உணவின் சுவை அலாதியானது. விரதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் ஆகியவற்றைத் துறந்த ஆயர்குலப் பெண்கள், இப்போது கண்ணனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் இனிப்பான இந்த உணவை சாப்பிடுகிறார்கள். பால்சோறு என்பது பாற்கடலையும் குறிக்கும். ""கண்ணா! உன் தரிசனம் கிடைத்து விட்டது. நாங்கள் நீ பள்ளிகொள்ளும் பாற்கடலில் இருப்பது போல் உணர்கிறோம். இதுவே நித்யசுகம். இந்த சுகத்தை எங்களுக்கு நிரந்தரமாகக் கொடு, என வேண்டுகிறார்கள்.


திருப்பள்ளியெழுச்சி - பாடல்  7 

அது பழச்சுவையென அமுதென 
அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார் 
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே 
எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும் 
மதுவளர்பொழில் திருவுத்தரகோசமங்கை உள்ளாய் 
திருப்பெருந்துறை மன்னா
எது எமைப்பணி கொளும் ஆறு அது கேட்போம் 
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

பொருள்:

 தேன்சிந்தும் மலர்களையுடைய சோலைகளைக் கொண்ட உத்தரகோசமங்கை தலத்தில் எழுந்தருளிய சிவனே! திருப்பெருந்துறையில் வசிக்கும் தலைவனே! உன் பெயர் சொன்னால் அது பழம் போல் இனிக்கிறது. பால் போல் சுவையாக இருக்கிறது. உன்னைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது சிரமமானது. உன்னை எளிதாகப் பிடித்து விடலாம் எனச் சொல்கிறார்களே தவிர, தேவர்களால் கூட அதைச் செய்ய முடியாது. ""உன்னுடைய வடிவம் என்ன? இவன் தான் அவனோ? என்று அனுமானிக்கத் திணறும் தேவர்களுக்கே காட்சி தராத நீ, ""இதோ, என் நிஜ வடிவம் இதுவே எனச் சொல்லி, இதோ! எங்கள் முன்னால் இருக்கிறாய். எங்களை நீ என்ன செய்ய நினைக்கிறாயோ, அதைச் செய் என்றே உன்னிடம் கேட்போம். எம்பெருமானே! நீ எழுந்தருள்வாயாக

விளக்கம்:

மிக அருமையான கருத்துடைய பாடல் இது. "எது எமைப்பணி கொள்ளும் ஆறு அது கேட்போம் என்ற வரி மிகுந்த சிறப்பைக் கொண்டது. கடவுளிடம் "அதைக் கொடு,. இதைக் கொடு என்று கேட்பதை விட, "எது சரியென்று படுகிறதோ, அதைச் செய் என்று கேட்பது மேலான கோரிக்கையல்லவா? அவனுக்கு தெரியுமே! நமக்கு என்ன தர வேண்டுமென்று! அதனால் நம்மை அவனிடம் ஒப்படைப்போம். அவன் தருவதை ஏற்றுக்கொள்வோம் என்பதே இப்பாடல் உணர்த்தும் கருத்து.