Showing posts with label திருவெமபாவை. Show all posts
Showing posts with label திருவெமபாவை. Show all posts

Friday, 12 January 2018

MARGAZLI DAY 29


திருப்பாவை பாடல் 29 

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் 
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ 
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது 
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு 
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் 
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

பொருள்:

கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை  பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்! பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே! நீ தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை) இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. என்றும், ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும். இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு.



திருப்பள்ளியெழுச்சி - பாடல்  9 

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா 
விழுப்பொருளே! உன் தொழும்பு அடியோங்கள் 
மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே
வண் திருப்பெருந்துறையாய்! வழியடியோம் 
கண்ணகத்தே நின்று களிதரு தேனே
கடலமுதே! கரும்பே! விரும்பும் அடியார் 
எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

பொருள்:

விண்ணுலகிலுள்ள தேவர்களாலும் நெருங்க முடியாத சிறந்த பொருளான சிவபெருமானே! உன்னை வணங்கும அடியவர்களுக்காக நீ இந்த மண்ணுலகிற்கு வந்து அருள்செய்து வாழ வைத்தாய். வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் வசிப்பவனே! பரம்பரை பரம்பரையாக உனக்கு பணிவிடை செய்யும் அடியவர்களின் கண்களுக்கு மட்டும் தெரியும் இனிய தேனே! பாற்கடலில் கிடைத்த அமுதமே! கரும்பே! உன்னை அணுகும் அடியவர்களின் எண்ணங்களில் நீக்கமற நிறைந்திருப்பவனே! நீயே இந்த உலகின் உயிர். எம்பெருமானே! நீ கண் விழித்தால் இந்த உலகம் வாழும்

Thursday, 11 January 2018

MARGAZLI DAY 28


திருப்பாவை பாடல் 28 

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம் 
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை 
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம் 
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு 
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது 
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை 
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே 
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

பொருள்:

குறையே இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள். எங்களுக்கு அறிவென்பதே இல்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும். உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுந்தம் உறுதியென்பதை பிறவிப்பயனாக அடைந்திருக்கிறோம் என்பதே அது. உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க யாராலும் முடியாது. விரதம் இருக்கும் முறை பற்றியெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள்! அதுபோல் கண்ணா! மணிவண்ணா! கருணாகரா! என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே. எங்கள் இறைவனே! எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக

விளக்கம்:

"குறையொன்றுமில்லாத கோவிந்தா என்ற வார்த்தையைப் படிக்கும் போது, கண்ணனுக்கு ஏதோ குறை இருந்தது போலவும், இப்போது தீர்ந்து விட் டது போலவும் தோற்ற மளிக்கிறது. அவனுக்கு என்ன குறை? ராமாவதாரத்தில், ராமபட்டாபிஷேகம் நடந்த போது, இந்திர லோகத்தில் எட்டு திசை காவலர்கள் பட்டாபிஷேகம் நடத்தியது போல, அயோத்தியில் வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஷ்யபர், காத்யாயனர், ஸுயஜ் ஞர், கவுதமர், விஜயர் என்ற எட்டு முனிவர்கள் என்று வால்மீகி ஏதோ ஆர்வத்தில் எழுதிவிட் டார். ராமனுக்கு இது ஒரு குறை. இந்திரனை ஜெயித்து இந்திரஜித் என்று பட்டம் பெற்றவனை நாம் நம் தம்பியை வைத்துஜெயித்தோம். அப்படிப் பட்ட கீழான இந்திரனுடன் நம்மை வால்மீகி ஒப்பிட்டு விட்டாரே! அது மட்டுமல்ல, அவன் கவுதமரின் மனைவி அகலிகையுடன் தப்பாக நடந்தவனாயிற்றே! அவனோடு நம்மை ஒப்பிடலாமா? என்ற குறை இருந்ததாம். கிருஷ்ணாவதாரத்தில், அந்த இந்திரன் தனக்கு செய்த பூஜையை ஆயர்கள் நிறுத்தியதால் சீற்றமடைந்து மழை பெய்யச் செய்தான். கோவர்த்தனகிரியை தூக்கி மக்களைக் காத்த கண்ணனின் காலில் அந்த இந்திரன் விழுந்தான். ராமாவதாரத்தில் ஏற்பட்ட குறை கிருஷ்ணாவதாரத்தில் நீங்கிவிட்டதால், ஆயர்குலப்பெண்கள் அவரை இப்படி வர்ணித்தார்கள்.



திருப்பள்ளியெழுச்சி - பாடல்  8 

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் 
மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார் 
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார் 
பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே
செந்தழல் புரை திருமேனியும் காட்டித் 
திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி 
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய் 
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே

பொருள்:

என்னை ஆட் கொண்ட ஆரமுதான சிவனே! மெல்லிய விரல்களையுடைய பார்வதியுடன் அடியவர்களின் பழைய வீடுகளுக்கு வந்தருளும் பரமேஸ்வரனே! நீயே உலகத்தைப் படைத்தமுதல்வன்,எல்லாருக்கும் நடுநாயகமானவன். அழிக்கும் தெய்வமும் நீயே! பிரம்மா, விஷ்ணு,ருத்ரன் ஆகிய மூவருமே உன்னை அறியமாட்டார்கள் என்னும் போது மற்றவர்களால் உன்னை எப்படி அறிய முடியும்? உன்னை அறிய முற்பட்ட போது நீ நெருப்பாக நின்றாய். திருப்பெருந்துறை கோயிலை என் கண்ணில் காட்டினாய். அந்தணரின் வேடத்தில் வந்து என்னை ஆட்கொண்டாய். இத்தகைய சிறப்புகளை உடையவனே! நீ துயில் எழுவாயாக

விளக்கம்:

இறைவன் எளிமையானவன். அவன் பங்களாவாசிகளுக்கு மட்டுமல்ல, ஓலை குடிசைகளை உடமையாகக் கொண்டவர்கள் வீட்டுக்கும் பவனியாக வருவான். அவனை வணங்க எதுவுமே வேண்டாம். நல்ல உள்ளம் இருந்தால் மட்டும் போதும் என்பது இப்பாடலின் உட்கருத்து.