Tuesday, 19 December 2017

MARGAZLI DAY 5

திருப்பாவை பாடல் 5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

பொருள்:
வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் கண்ணனை, நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம். அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய்விடும்.

விளக்கம்:
"உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும் என்பது ஒரு தாய்க்கு பிள்ளை செய்ய வேண்டிய கடமை. தேவகி தாய்க்கு கண்ணனை பெற்றதால் பெருமை. "ஈங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் என்று அவள் பெருமைப்படுகிறாள். குழந்தைகள், பெற்றவர்களுக்கு நல்ல பெயர் வாங்கித் தரவேண்டும் என்பது இதன் உட்கருத்து.

 திருவெம்பாவைபாடல்  5

மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்

பொருள்:
"நறுமணத்திரவியம் பூசிய கூந்தலையும், பாலும் தேனும் ஊறும் இனிய உதடுகளைக் கொண்டவளுமான பெண்ணே! திருமால் வராகமாகவும், பிரம்மா அன்ன

மாகவும் உருவெடுத்துச் சென்றும் அவரது உச்சியையும், பாதங்களையும் காண முடியாத பெருமையை உடைய மலை வடிவானவர் நம் அண்ணாமலையார். ஆனால், அவரை நாம் அறிவோம் என நீ சாதாரணமாகப் பேசுகிறாய். நம்மால் மட்டுமல்ல... இவ்வுலகில் உள்ள மற்றவர்களாலும், அவ்வுலகிலுள்ள தேவர்களாலுமே அவனை புரிந்து கொள்ள முடியாது. அப்படிப்பட்ட பெருமைக்குரியவனை உணர்ச்சிப்பெருக்குடன்"சிவசிவ என்று ஓலமிட்டு அழைக்கிறோம். நீயோ, இதை  உணராமல் உறக்கத்தில் இருக்கிறாய். முதலில் கதவைத் திற என்று தோழியை எழுப்புகிறார்கள் திருவண்ணாமலை நகரப் பெண்கள்.

விளக்கம்:
 "கடவுளா...அவரை எனக்குத் தெரியாதா... அவரைத் தான் தினமும் பார்க்கிறேனே! தினமும் கோயிலுக்குப் போகவேண்டுமென்று கட்டாயமா என்ன! புதிதாகஅவரிடம் என்ன காணப்போகிறோம்! வருஷம் தோறும் வருகிற மார்கழி தானே! கட்டாயம் காலையில் எழ வேண்டுமா என்ன! என்று விதண்டாவாதம் பேசுபவர்கள் இருக்கிறார்கள். அதுபோல் தான் தோழியின் நிலை இருக்கிறது. இந்த அஞ்ஞானத்தைப் போக்கும் வகையில், இறைவனின் சிறப்பை எடுத்துச் சொல்கிறார்கள் சக தோழியர்.

No comments:

Post a Comment