Monday, 25 December 2017

MARGAZLI DAY 11


திருவெம்பாவைபாடல்  11 

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக் 

கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி 
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் 
ஆரழல் போல் செய்யா! வெண்ணீறு ஆடி! செல்வா
சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில் 
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம் 
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்

பொருள்:

சிவபெருமானே! உன் அடியவர்களான நாங்கள் வண்டுகள் மொய்க்கும் மலர்களைக் கொண்ட குளத்தில் "முகேர் என சப்தம் எழுப்பி குதித்து, தண்ணீரைக் குடைந்து நீந்தியபடியே உன் திருவடிகளை எண்ணிப் பாடினோம். வழிவழியாக இந்த பாவை நோன்பை நிறைவேற்றி வருவதை நீ அறிவாய். சிவந்த நெருப்பைப் போன்றவனே! உடலெங்கும் திருநீறு அணிந்தவனே! செல்வத்தின் அதிபதியே! சிறிய இடையையும், மையிட்ட அழகிய கண்களையும் உடைய பார்வதிதேவியின் மணாளனே! ஐயனே! நீ இந்த உயிர்களை ஆட்கொண்டதும் அவை என்னவெல்லாம் நன்மையடையுமோ, அவை அனைத்தையும் அடைந்து விட்ட உணர்வு உன்னைப் பாடினாலே எங்களுக்கு கிடைத்து விடுகிறது! இந்த பேரின்பநிலை மறைந்து விடாமல் என்றும் நிலைத்திருக்க அருள்செய்வாயாக

விளக்கம்:

உலகத்தில் எல்லா உயிர்களையும் இறைவன் ஆட்கொள்ளத்தான் போகிறான்! யானையும், சிலந்தியும், பறவைகளும் கூட அவனால் ஆட்கொள்ளப்பட்ட தகவல்களை நாம் படிக்கிறோம். ஆனால், மனிதனுக்கு மட்டுமே அவனைப் பாடும் வகையில் வாயைத் தந்திருக்கிறான்பேசத்திறனற்றிருந்தாலும் மனதுக்குள் படிக்கும் திறனைத் தந்திருக்கிறான். எனவே கிடைத்தற்கரிய இந்த மானிடப்பிறவியைப் பயன்படுத்தி நீராடும் போதும், உண்ணும் முன்பும், உறங்கும் முன்பும் "நமசிவாய என்று அவன் திருநாமம் சொல்லி பிறப்பற்ற நிலையடைய வேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.


திருப்பாவை பாடல் 11 

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து 
செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும் 
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே 
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய் 
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின் 
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட 
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ 
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்

பொருள்:

கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால் கறப்பவனாகவும், தங்களைப் பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனும், மாசுமருவற்றவனுமான கோபாலனை தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே! புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய மயில் போன்றவளே! நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள். அவர்கள் மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே! இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே! அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது

விளக்கம்:

நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. தோழியோ எழுந்து வந்தபாடில்லை! நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? அவளை விட்டுவிட்டு, நீராடச் சென்றிருப்போம். ஆனால், பக்திநெறிக்கு இது அழகல்ல. பிறரை விட்டுவிட்டு, தான் மட்டும் இறைவனை அடைய முயன்றால் அது நடக்காத ஒன்று. எல்லோருமாய் இறைவனை நாட வேண்டும், அவன் புகழ் பேச வேண்டும். அப்போது தான் அவனருள் கிடைக்கும். இதனால் தான் கூட்டுப்பிரார்த்தனைக்கு மகத்துவம் அதிகமாக இருக்கிறது.

No comments:

Post a Comment